தூத்துக்குடி: சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ஹமீதியா மசூதிக்குள் அத்துமீறி நுழைந்து, மசூதி நிர்வாகிகள் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் சம்பவத்துக்கு மக்கள் எழுச்சி ஜனநாயகக் கட்சித் தலைவர் காயல் அப்பாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை கோடம்பாக்கத்தில் அமைந்துள்ள ஹமீதியா மசூதியில் அதிகாலை சுமார் 4.30 மணியளவில் ஒருவர் பூட்டை உடைத்து அத்துமீறி உள்ளே நுழைந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, புனித குர்ஆனைச் சேதப்படுத்தியதுடன், அங்கிருந்த பொருட்களையும் சேதப்படுத்தி, மசூதி நிர்வாகிகள் மீது தாக்குதல் நடத்தியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், சம்பவம் குறித்துத் தகவல் அறிந்து அங்கு வந்த பெண் காவல் உதவி ஆய்வாளரிடம் அவமரியாதையாகப் பேசியதுடன், அவருடன் வந்த நான்கு காவலர்களையும் தாக்கியதாகக் கூறப்படும் இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சாவூர் மாவட்டத்தில் மசூதிக்குள் அத்துமீறி நுழைந்து, பாங்கு சொல்லக்கூடாது என்றும், ஜெய் ஸ்ரீராம்; எனக் கூற வேண்டும் என்றும் கட்டாயப்படுத்தியதாகவும், ஹசரத் மற்றும் நிர்வாகிகள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் ஒரு சம்பவம் நடைபெற்றது. அந்தச் சம்பவத்தில் தொடர்புடைய ராணுவ வீரர் மீது வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் கைது செய்தனர்.இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறுவது தமிழகத்தின் சமூக நல்லிணக்கத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தும். அமைதிப் பூங்காவாகத் திகழும் தமிழகத்தில் மத மோதல்களை ஏற்படுத்தும் நோக்கத்துடன் இத்தகைய செயல்கள் நடைபெறுகின்றனவா என்ற சந்தேகம் எழுகிறது.எனவே, சமூக நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் வகையில் செயல்படுபவர்களை உளவுத்துறையினர் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும். கோடம்பாக்கம் ஹமீதியா மசூதிக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் நபர் மீது உரிய வழக்குப் பதிவு செய்து, அவரைக் கைது செய்து சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும், இத்தகைய சம்பவங்களின் பின்னணியில் வேறு யாரேனும் உள்ளனரா என்பதையும் காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரிக்க வேண்டும்.இனிவரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க, தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் மற்றும் காவல்துறை இயக்குநர் மகேஷ்குமார் அகர்வால் ஆகியோர் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் எழுச்சி ஜனநாயகக் கட்சி சார்பில் வலியுறுத்துகிறோம்.இவ்வாறு மக்கள் எழுச்சி ஜனநாயகக் கட்சித் தலைவர் காயல் அப்பாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.