தூத்துக்குடி மாவட்டத்தில் காந்திய கைம்பெண்கள் கூட்டமைப்பு மற்றும் பனிமலர் கைம்பெண்கள் கூட்டமைப்பு ஆகியவற்றின் சார்பில், ஆதரவற்ற பெண்களின் நலனுக்காகப் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தக் கூட்டமைப்புகள், கைம்பெண்கள் ஆதரவற்ற பெண்கள் நலச்சங்கம் – தமிழ்நாடு (பதிவு எண்: SRG/Trichy 87/2023) அமைப்பின் ஓர் அங்கமாகச் செயல்பட்டு வருகின்றன.தமிழக அரசு கடந்த 2022-ஆம் ஆண்டு தமிழ்நாடு கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்கள் நல வாரியத்தைத் தொடங்கி செயல்படுத்தி வருவது மகிழ்ச்சியளிப்பதுடன், பாராட்டுக்குரியதாகவும் உள்ளது.2011-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, தமிழ்நாட்டில் 38.56 லட்சம் கைம்பெண்களும், 4,43,469 கணவரால் கைவிடப்பட்ட பெண்களும் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் சமூகப் பாகுபாடுகளைக் களைந்து, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்கள் நலச்சங்கம் – தமிழ்நாடு சார்பில் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
முக்கியக் கோரிக்கைகள்: 1. நலத்திட்டங்கள் முழுமையாகச் சென்றடைய வேண்டும்: தமிழ்நாடு கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்கள் நல வாரியம், அரசின் நலத்திட்டங்கள் அனைத்தும் தகுதியுள்ள கைம்பெண்களை முழுமையாகச் சென்றடைவதை உறுதி செய்யும் வகையில் செயல்பட வேண்டும். 2. கைம்பெண்கள் குறித்த கணக்கெடுப்பு: தமிழக அரசு கைம்பெண்கள் குறித்த முழுமையான கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும். இந்தக் கணக்கெடுப்பு அந்தந்த ஊராட்சிகள் அளவில் மேற்கொள்ளப்பட வேண்டும். 3. வயது வரம்பை 55 ஆக உயர்த்த வேண்டும்: அனைத்துத் துறைகளிலும் அரசின் நலத்திட்டங்களைத் தகுதியுள்ள கைம்பெண்கள் அனைவரும் பெறுவதற்கு ஏதுவாக, வயது வரம்பை 55 வயது வரை உயர்த்த வேண்டும். 4. மாதாந்திர உதவித்தொகையை உயர்த்த வேண்டும்: கைம்பெண்களுக்கான மாதாந்திர உதவித்தொகையை ரூ.5,000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். 5. வீடு வழங்க வேண்டும்: வீடற்ற கைம்பெண்கள் மற்றும் தனித்து வாழும் பெண்கள் பாதுகாப்புடனும் கண்ணியத்துடனும் வாழ்வதற்கு அரசு வீடுகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 6. பாகுபாடுகளைத் தடுக்கச் சட்டம்: சமூக, பண்பாட்டு, அரசியல் மற்றும் பொருளாதாரத் தளங்களில் கைம்பெண்கள் பாகுபாட்டுடன் நடத்தப்படுவதைத் தடுக்க, சமத்துவம் மற்றும் பாகுபாடின்மையை உறுதிப்படுத்தும் வகையில் தனிச் சட்டம் இயற்ற வேண்டும். கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்களின் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் முன்னேற்றத்தை உறுதி செய்யும் வகையில், மேற்கண்ட கோரிக்கைகள் மீது அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான கூடுதல் நலத்திட்டங்களை உருவாக்கிச் செயல்படுத்த வேண்டும் என்றும் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த காந்திய கைம்பெண்கள் கூட்டமைப்பு மற்றும் பனிமலர் கைம்பெண்கள் கூட்டமைப்பின் சார்பில் திருமதி ஜி. கஸ்தூரி, மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.தூத்துக்குடி:
தமிழகத்தில் கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், அவர்களுக்கான மாதாந்திர உதவித்தொகையை ரூ.5,000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் கைம்பெண்கள் கூட்டமைப்பு சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.