தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டம், புதூர் பேரூராட்சியில் கடந்த 60 ஆண்டுகளாகத் தனியார் கட்டிடத்தில் இயங்கி வரும் கிளை நூலகத்திற்குப் போதிய வசதிகளுடன் புதிய கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்து நிர்வாக அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி, சமூக ஆர்வலர் போ. முருகேசன் (77), மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார்.புதூர் பேரூராட்சியில் செயல்பட்டு வரும் கிளை நூலகக் கட்டிடம் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளதாகவும், மழைக்காலங்களில் மேற்கூரை வழியாக மழைநீர் ஒழுகுவதால் பாதிப்பு ஏற்படுவதாகவும் மனுவில் தெரிவித்துள்ளார். மேலும், வாசகர்கள் அமர்ந்து படிப்பதற்குப் போதிய இடவசதி, காற்றோட்டம் மற்றும் இயற்கை வெளிச்சம் இல்லாததால் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் சிரமப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.இதனால், 2020ஆம் ஆண்டு முதல் புதிய நூலகக் கட்டிடம் கட்ட வேண்டும் எனத் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, அப்போதைய மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் நடவடிக்கை மேற்கொண்டதையடுத்து, புதூர் வட்டம், குளக்கட்டா குரிச்சி கிராமத்தில் நூலகத்திற்காக 5 சென்ட் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.இதற்கான நில ஒதுக்கீட்டு நடவடிக்கைகள் முடிவடைந்து ஓராண்டுக்கும் மேலாகியும், புதிய நூலகக் கட்டிடம் கட்டுவதற்கான போதிய நிதி ஒதுக்கீடும் நிர்வாக அனுமதியும் கிடைக்கவில்லை என அவர் குற்றம்சாட்டியுள்ளார்.இதற்கிடையில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் 11 அடி × 21 அடி அளவில் ஓர் அறை கட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.தற்போதைய நூலகத்தில் சுமார் 30,000 புத்தகங்கள், 15 புத்தக அலமாரிகள், 4 பெஞ்சுகள், 19 நாற்காலிகள், 7 மேஜைகள், 3 கணினிகள் மற்றும் பிற தளவாடப் பொருட்கள் உள்ளதாகவும், இவற்றைச் சிறிய அறையில் மாற்றி வைப்பதுடன் வாசகர்களுக்குப் போதிய இடவசதி ஏற்படுத்துவது சாத்தியமற்றது என்றும் அவர் தெரிவித்துள்ளார்மேலும், அருகிலுள்ள விளாத்திகுளம் மற்றும் எட்டயபுரம் பேரூராட்சிகளில் நூலகங்களுக்கு அரசு கட்டிடங்களில் வசதிகள் செய்யப்பட்டுள்ள நிலையில், புதூர் பேரூராட்சியில் மட்டும் போதிய வசதிகள் இல்லாத நிலை நீடிப்பதாகவும், இதனால் அப்பகுதி மக்கள் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியருக்கு பலமுறை மனுக்கள் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறியுள்ள போ. முருகேசன், புதூர் பேருந்து நிலையம் முன்பாக ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதி வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.புதூர் கிளை நூலகத்திற்குப் போதிய வசதிகளுடன் புதிய கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்து, நிர்வாக அனுமதி வழங்க மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அவரது கோரிக்கையாகும்.