நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்திற்குள் புகுந்து ஸ்டேஷன் மாஸ்டரை ஆட்டோ ஓட்டுநர்கள் தாக்கியதில் அவரது மண்டை உடைந்தது. இதுதொடர்பாக 3 ஆட்டோ ஓட்டுநர்களை ரயில்வே இருப்புப் பாதை போலீசார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் காரணமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் ஸ்டேஷன் மாஸ்டராக பணியாற்றி வருபவர் சபாபதி. ரயில் நிலையத்துக்குள் ஆட்டோக்கள் நுழைவதற்கும், பயணிகளை ஏற்றிச் செல்வதற்குமான பெர்மிட் வழங்குவதில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் ரயில்வே நிர்வாகத்திற்கும் இடையே சில நடைமுறைப் பிரச்சனைகள் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.இந்நிலையில், இது தொடர்பாக ஆட்டோ ஓட்டுநர்கள் சிலர் நேற்று ஸ்டேஷன் மாஸ்டர் சபாபதியிடம் பேசுவதற்காகச் சென்றுள்ளனர். அப்போது இருதரப்பிற்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றவே, ஆத்திரமடைந்த ஆட்டோ ஓட்டுநர்கள் சபாபதியை தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த சபாபதியின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.ரயில் நிலையத்திற்குள் அதிகாரி தாக்கப்பட்டதைப் பார்த்து அங்கிருந்த பயணிகள் அலறியடித்து ஓடினர். காயமடைந்த சபாபதி உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து ரயில்வே இருப்புப் பாதை போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அங்குள்ள கண்காணிப்புக் கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். அதன் பேரில், தாக்குதலில் ஈடுபட்டதாக களக்காடு பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் மருதுபாண்டி, நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த கணேசன் மற்றும் தெற்கு வாகைகுளம் பகுதியைச் சேர்ந்த முருகன் ஆகிய மூன்று பேரையும் கைது செய்து அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.