### பத்திரிக்கை செய்தி

### தூத்துக்குடி மாநகராட்சியில் நிலத்தடி நீர் விற்பனை: கண்டுகொள்ளாத நிர்வாகம்? நடவடிக்கை எடுக்குமா மாநகராட்சி!

20-க்கும் மேற்பட்ட இடங்களில் நீர் விற்பனை நடைபெறுவதாகப் புகார் – அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை!

தூத்துக்குடி:

தமிழகம் முழுவதும் கடும் வெயிலின் தாக்கத்தால் பல்வேறு பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் தினசரி குடிநீர் விநியோகம் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. இதற்காக மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் முக்கியப் பங்கு வகிப்பதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிகளில் நிலத்தடி நீரை எடுத்து விற்பனை செய்வதாகப் புகார்கள் எழுந்துள்ளன. குறிப்பாக, டூவிபுரம் வி.வி.டி. சிக்னல் சர்வீஸ் சாலையில் இரண்டு இடங்களிலும், ராஜீவ் நகர் மூன்றாவது தெருவில் இருந்து மடத்தூர் செல்லும் சாலையில் ஒரு இடத்திலும் நீர் விற்பனை நடைபெறுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதுபோன்று மாநகராட்சிப் பகுதியில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் நிலத்தடி நீர் எடுத்து விற்பனை செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது. மேலும், சில இடங்களில் நிலத்தடி நீர் என்ற பெயரில் மாநகராட்சி மூலம் விநியோகிக்கப்படும் குடிநீர் விற்பனை செய்யப்படுவதாகவும் புகார்கள் தெரிவிக்கின்றன. இந்தப் புகார்கள் குறித்து உரிய விசாரணை நடத்தி உண்மை நிலையை வெளிப்படுத்த வேண்டும் எனப் பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

இதுதொடர்பாக மாநகராட்சி ஆணையர் மற்றும் அதிகாரிகளிடம் தொடர்ந்து புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனப் புகார் கூறப்படுகிறது. ஆய்வு மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டாலும், அதன் அடிப்படையில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்த தெளிவான தகவல் இல்லை என்றும் பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

ஏற்கெனவே மாநகராட்சியில் பணியாற்றிய சில ஆணையர்கள், விதிமீறல்கள் கண்டறியப்பட்ட நீர் விற்பனை நிலையங்களுக்கு சீல் வைத்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், தற்போது மாநகராட்சி ஆணையர் பிரியங்கா தலைமையிலான நிர்வாகம் இவ்விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. பல மாமன்ற உறுப்பினர்களும் இதுகுறித்து புகார் அளித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நிலத்தடி நீரைத் தொடர்ந்து அதிக அளவில் எடுத்து விற்பனை செய்வது, எதிர்காலத்தில் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படுவதற்கும் குடிநீர் ஆதாரங்களுக்கு நெருக்கடி ஏற்படுவதற்கும் வழிவகுக்குமோ என்ற அச்சம் பொதுமக்களிடையே நிலவுகிறது.

மேலும், லாரிகள் மற்றும் சிறிய சரக்கு வாகனங்கள் மூலம் ஹோட்டல்கள், தேநீர் கடைகள், திருமணங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்குத் தண்ணீர் விநியோகம் செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது. இந்த நீர் எந்த ஆதாரத்திலிருந்து எடுக்கப்படுகிறது, உரிய அனுமதிகள் பெறப்பட்டுள்ளனவா, விற்பனை செய்யப்படும் நீரின் தரம் பரிசோதிக்கப்படுகிறதா என்பதையும் அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.

எனவே, தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் செயல்படும் நீர் விற்பனை நிலையங்கள் அனைத்தையும் முறையாக ஆய்வு செய்து, விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். நிலத்தடி நீர் பாதுகாப்பையும் பொதுமக்களின் குடிநீர் தேவையையும் கருத்தில் கொண்டு, இந்தப் பிரச்சினைக்கு மாநகராட்சி நிர்வாகம் நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்குமா? அல்லது வழக்கம்போல் மௌனம் காக்குமா? என்பதே தற்போது எழுந்துள்ள கேள்வியாகும்.