சென்னை:
முதல் பட்டதாரி சான்றிதழ், கைவிடப்பட்ட பெண் சான்றிதழ் உள்ளிட்ட 12 சான்றிதழ்களை வழங்கும் அதிகாரம் தாசில்தாருக்கு பதில் துணை தாசில்தாருக்கு வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் விண்ணப்பத்தின் பரிசீலனை நடைபெறும் நிலை, நிராகரிப்பு அல்லது விண்ணப்பம் திருப்பி அனுப்பப்பட்டதற்கான காரணங்கள் ஆகியவை விண்ணப்பதாரர்களுக்கும் அதிகாரிகளுக்கும் தெரியும் வகையில் சாப்ட்வேரில் தேவையான மாற்றங்கள் செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை வெளியிட்டுள்ள அரசாணையில் கூறுகையில், "தமிழகத்தில் ஆன்லைன் மூலம் வருவாய்த்துறை சான்றிதழ்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. இதனால் தாசில்தார்களுக்கு பணிச்சுமை அதிகரித்து, விண்ணப்பங்களை முடிப்பதில் தாமதம் ஏற்படுகிறது.
எனவே, வருவாய் சான்றிதழ்களை வழங்கும் பொறுப்பை சமூகப் பாதுகாப்பு திட்டங்கள் தாசில்தாருக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் வழக்கமான தாசில்தார்கள் நிலம் தொடர்பான பிரச்சினைகள், சட்டம்-ஒழுங்கு உள்ளிட்ட பணிகளில் கூடுதல் கவனம் செலுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, முதல் பட்டதாரி சான்றிதழ், கைவிடப்பட்ட பெண் சான்றிதழ் உள்ளிட்ட 12 சான்றிதழ்களை வழங்கும் அதிகாரம் துணை தாசில்தாருக்கு வழங்கப்பட்டுள்ளது.
மேலும், விண்ணப்பத்தின் பரிசீலனை நடைபெறும் நிலை, நிராகரிப்பு அல்லது விண்ணப்பம் திருப்பி அனுப்பப்பட்டதற்கான காரணங்கள் ஆகியவை விண்ணப்பதாரர்களுக்கும் அதிகாரிகளுக்கும் தெரியும் வகையில் மென்பொருளில் தேவையான மாற்றங்கள் செய்யப்படும். திருப்பி அனுப்பப்பட்ட விண்ணப்பங்களை தமிழகத்தில் உள்ள எந்த இ-சேவை மையத்திலும் திருத்தம் செய்து மீண்டும் சமர்ப்பிக்கும் வசதியும் ஏற்படுத்தப்படும்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வருவாய்த் துறையில் விண்ணப்பங்களை விரைவாகப் பரிசீலித்து சான்றிதழ்கள் வழங்குவதற்காக, தலைமையிடத்துத் துணை தாசில்தார்/ மண்டலத் துணை தாசில்தார் மூலம் ஒப்புதல் அளித்து சான்றிதழ் வழங்கும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ள 12 முக்கியமான சான்றிதழ்களின் விவரங்களை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பார்ப்போம்
முதல் பட்டதாரி சான்றிதழ் (First Graduate Certificate)
கைவிடப்பட்ட பெண் சான்றிதழ் (Deserted Woman Certificate)
விதவைச் சான்றிதழ் (Widow Certificate)
திருமணமாகாதவர் சான்றிதழ் (Unmarried Certificate)
இருப்பிடச் சான்றிதழ் (Residence Certificate)
இருப்பிட நிருபணச் சான்றிதழ் (Nativity Certificate)
ஆண் வாரிசு இல்லை என்பதற்கான சான்றிதழ் (No Male Child Certificate)
கால்நடை / கல்விச் சான்றுகள் இழப்புச் சான்றிதழ் (Loss of Educational Records / Certificates)
இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் சான்றிதழ் (OBC Certificate - BC / MBC / DNC பிரிவினருக்கு)
இடைச்சாதித் திருமணச் சான்றிதழ் (Inter-caste Marriage Certificate)
குடும்ப வருமானச் சான்றிதழ் (Income Certificate)
ஜாதிச் சான்றிதழ் (Community Certificate - BC / MBC / DNC பிரிவினருக்கு மட்டும்)
குறிப்பு: பட்டியல் சாதியினர் (SC) சான்றிதழ்களுக்கு தாசில்தாரும், பட்டியல் பழங்குடியினர் (ST) சான்றிதழ்களுக்கு கோட்டாட்சியரும் (RDO) இறுதி ஒப்புதல் அதிகாரிகளாகச் செயல்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.